Sunday, December 5, 2010

Thiru Eengoimalai திருஈங்கோய் மலை

சிவஸ்தலம் பெயர்திருஈங்கோய்மலை
இறைவன் பெயர்மரகதாசலேசுவரர், மரகத நாதர்
இறைவி பெயர்மரகதவல்லி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருச்சிக்கு அருகில் உள்ள குளித்தலையில் இருந்து காவிரி ஆற்றைக் கடந்து சென்றால் காவிரியின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு மரகதாசலேசுவரர் திருக்கோயில் திருஈங்கோய்மலை திருவிங்க நாதமலை வழி மணமேடு தொட்டியம் வட்டம் திருச்சி மாவட்டம் PIN - 621209

இவ்வாலயம் தினந்தோறும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.


சோழ நாட்டுத் தலங்களுள் காவிரியின் வடகரையில் உள்ள திருமுறைத் தலங்களுள் இது கடைசித்தலம். தமிழ்நாட்டிலுள்ள கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகில் இருக்கும் 3 சிவஸ்தலங்களை ஒரே நாளில் காலை, பகல் மற்றும் மாலை வேளைகளில் சென்று தரிசனம் செய்து வணங்கினால் புண்ணியம் என்று கூறப்படுகிறது. இவற்றுள் திருஈங்கோய்மலை காவிரி வடகரைத் தலம். மற்ற இரண்டு தலங்களான திருவாட்போக்கியும், கடம்பந்துறையும் காவிரி தென்கரைத் தலங்கள். அவ்வகையில் திருஈங்கோய்மலை தலத்தில் உள்ள மரகதாசலேசுவரரை மாலையில் வழிபடுவது மிகவும் பலனுடையது என்று கருதப்படுகிறது. காலையில் கடம்பர் கோயிலையும் (கடம்பந்துறை), நண்பகலில் வாட்போக்கியையும் வழிபட வேண்டும். இவ்வாறு ஒரே நாளில் தரிசிப்பதற்கு எல்லா நாள்களும் ஏற்றவை எனினும், கார்த்திகைச் சோமவாரம் சிறப்பான நாளாகச் சொல்லப்படுகிறது.

இத்தலத்து இறைவன் ஒரு சிறிய குன்றின் மீது அமர்ந்திருக்கிறார். திருவாட்போக்கி மலையைப் போன்று அவ்வளவு உயரமில்லை. சுமார் 500 படிகள் ஏறினால் கோவில் வந்தடையலாம்.


தல வரலாறு

  • தற்போது மக்கள் வழக்கில் திருவிங்கநாதலை என்று வழங்குகிறது.

  • அகத்தியர் ஈ உருவத்தில் இங்குள்ள இறைவனை வழிபட்டதால் ஈங்கோய்மலை என்று பெயர் வந்தது.
  • சிவபெருமானின் சந்நிதியில் உள்ள தீபம் காற்று பட்டாலும் அசையாத கொழுந்துடன் விளங்கிகிறது. அதனால் சுவாமிக்கு அசல ஈசுவரர் என்ற பெயரும் உண்டு.

சிறப்புக்கள்

  • அம்பிகை வழிபட்டதால் இதற்கு சிவசக்திமலை என்றும் பெயர் வழங்குகிறது.

  • சிவலிங்கம், பெயருக்கேற்ப மரகதக்கல் போல நல்ல பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கிறது.
  • நக்கீரர் இம்மலை மீதுள்ள பெருமான் மீது 'ஈங்கோய் எழுபது ' என்ற நூலைப் பாடிப் பரவியுள்ளார்.
  • சிவராத்திரியன்று அல்லது முன்நாளில் சூரிய ஒளி லிங்கத்தின் மீது படுகின்றது.
  • ஈங்கோய்மலைக் கோயில் அருகில் உள்ள வாட்போக்கிமலை, கடம்பந்துறையை பார்க்கிறது; கடம்பந்துறைக் கோயில் ஈங்கோயைப் பார்த்த வண்ணமுள்ளது. இம்மூன்று மலைகளும் சோமாஸ்கந்த வடிவில் உள்ளதென்பர். ஒரேநாளில் காலையில் கடம்பர் கோயிலையும் (கடம்பத்துறை) நண்பகலில் வாட்போக்கியையும், மாலையில் திருஈங்கோய் மலையையும் தரிசித்தல் விசேஷமானது என்பர். 'காலைக் கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி ஈங்கோய்நாதர் ' என்னும் வழக்குள்ளது. இவ்வாறு தரிசிப்பது எல்லா நாட்களும் ஏற்றவையெனினும் கார்த்திகைச் சோமவாரம் சிறப்பான நாளாகச் சொல்லப்படுகிறது.
  • கோயிலுள் நுழையும் போது தட்சிணாமூர்த்தி, விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன.
  • வலமாக வரும்போது கோயிலின் விசாலமான பழைமையான திறந்தவெளி அமைப்பைக் காண முடிகிறது.
  • உள்ளே நவக்கிரக, நால்வர் சந்நிதிகள் உள்ளன.
  • அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோயில் விமானங்கள், கொடிமரங்கள் உள்ளன.
  • பால தண்டாயுதபாணி சந்நிதி தனியே உள்ளது.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் மத்தமலர்சூடித்
தேனொத்தனமென் மொழிமான்விழியாள் தேவிபாகமாக்
கானத்திரவில் எரிகொண்டாடுங் கடவுளுலகேத்த
ஏனத்திரள்வந் திழியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.

சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகாடிடமாகக்
கோலச்சடைகள்தாழக் குழல்யாழ் மொந்தைகொட்டவே
பாலொத்தனைய மொழியாள்காண ஆடும்பரமனார்
ஏலத்தொடுநல் இலவங்கமழும் ஈங்கோய்மலையாரே.

கண்கொள்நுதலார் கறைகொள்மிடற்றார் கரியினுரிதோலார்
விண்கொள்மதிசேர் சடையார்விடையார் கொடியார்வெண்ணீறு
பெண்கொள்திருமார் பதனில்பூசும் பெம்மானெமையாள்வார்
எண்கும்அரியுந் திரியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.

மறையின்னிசையார் நெறிமென்கூந்தல் மலையான்மகளோடுங்
குறைவெண்பிறையும் புனலும்நிலவுங் குளிர்புன்சடைதாழப்
பறையுங்குழலுங் கழலுமார்ப்பப் படுகாட்டெரியாடும்
இறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.

நொந்தசுடலைப் பொடிநீறணிவார் நுதல்சேர்கண்ணினார்
கந்தமலர்கள் பலவும்நிலவு கமழ்புன்சடைதாழப்
பந்தண்விரலாள் பாகமாகப் படுகாட்டெரியாடும்
எந்தம்மடிகள் கடிகொள்சாரல் ஈங்கோய்மலையாரே.

நீறாரகலம் உடையார்நிரையார் கொன்றையரவோடும்
ஆறார்சடையார் அயில்வெங்கணையால் அவுணர்புரம்மூன்றுஞ்
சீறாவெரிசெய் தேவர்பெருமான் செங்கண்அடல்வெள்ளை
ஏறார்கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.

வினையாயினதீர்த் தருளேபுரியும் விகிர்தன்விரிகொன்றை
நனையார்முடிமேல் மதியஞ்சூடும் நம்பானலமல்கு
தனையார்கமல மலர்மேலுறைவான் தலையோடனலேந்தும்
எனையாளுடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.

பரக்கும்பெருமை இலங்கையென்னும் பதியிற்பொலிவாய
அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளும் அணியார்விரல்தன்னால்
நெருக்கியடர்த்து நிமலாபோற்றி யென்றுநின்றேத்த
இரக்கம்புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.

வரியார்புலியின் உரிதோலுடையான் மலையான்மகளோடும்
பிரியாதுடனாய் ஆடல்பேணும் பெம்மான்திருமேனி
அரியோடயனும் அறியாவண்ணம் அளவில்பெருமையோ
டெரியாய்நிமிர்ந்த எங்கள்பெருமான் ஈங்கோய்மலையாரே.

பிண்டியேன்று பெயராநிற்கும் பிணங்குசமணரும்
மண்டைகலனாக் கொண்டுதிரியும் மதியில்தேரரும்
உண்டிவயிறார் உரைகள்கொள்ளா துமையோடுடனாகி
இண்டைச்சடையான் இமையோர்பெருமான் ஈங்கோய்மலையாரே.

விழவாரொலியும் முழவும்ஓவா வேணுபுரந்தன்னுள்
அழலார்வண்ணத் தடிகளருள்சேர் அணிகொள்சம்பந்தன்
எழிலார்சுனையும் பொழிலும்புடைசூழ் ஈங்கோய்மலையீசன்
கழல்சேர்பாடல் பத்தும்வல்லார் கவலைகளைவாரே.

No comments:

Post a Comment