Sunday, December 5, 2010

Shive Tamples Glorified with Thevara Hymns பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

Shive Tamples Glorified with Thevara Hymns

பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் அநேக சிவன் கோவில்கள் இருந்தாலும், 274 கோவில்கள் மட்டுமே பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் என்ற சிறப்பைப் பெற்றிருக்கின்றன. தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் வாழ்ந்திருந்த காலமாகிய 7, 8 மற்றும் 9-ம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்ட தேவார பதிகங்களில் இந்தக் கோவில்களைப் பற்றியும், கோவில்களில் குடி கொண்டுள்ள சிவபெருமானைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் என்று கூறப்படும் இந்தக் கோவில்கள் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. அவ்வளவு பழம் பெருமை வாய்ந்த இந்தக் கோவில்கள் தனிச்சிறப்பு பெற்றதில் வியப்பில்லை.

தமிழ்நாட்டில் தேவாரம் எழுந்ததற்கு முன்பே சிவாலயங்கள் இருந்து வந்தன. அடியார்கள் அந்தந்த ஊர்களில் ஆலய வழிபாடு செய்து வந்தார்கள். இராஜ ராஜ சோழனும், நம்பியாண்டார் நம்பிகளும் தில்லை சிதம்பரத்தில் தேவாரம் எழுதியிருந்த ஏட்டுச் சுவடிகளைக் கண்டுபிடித்து எடுத்த போது அவைகள் கறையானால் மூடப்பட்டிருந்தது. பிறகு எண்ணை ஊற்றி கறையானைப் போக்கி ஏட்டை எடுத்துப் பார்க்கும் போது பல பதிகங்கள் சிதைந்திருந்தன. அதைக் கண்டு சோழ மன்னன் வருந்தியபோது "ஈண்டு வேண்டுவன வைத்தோம்" என்று அசரீரி வாக்கு எழ, பிறகு கிடைத்தவற்றை ஒழுங்கு படுத்தினார்கள். தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் தோன்றி தேவாரம் பாடிய பிறகு, தேவாரம் பெற்ற ஸ்தலங்களுக்கு தனி மதிப்பு ஏற்பட்டது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய இந்த மூவரும் அக்காலத்தில் இருந்த இந்தக் கோவில்களுக்குச் சென்று அங்கு குடி கொண்டுள்ள இறைவனைத் தரிசித்து இறைவன் மேல் பதிகங்கள் பாடியுள்ளனர். பல இடங்களில் பதிகங்கள் பாடி அற்புதங்களும் நிகழ்த்தியுள்ளனர். உதாரணமாக திருமருகல் என்கின்ற சிவஸ்தலத்தில் பாம்பு கடித்து இறந்த ஒரு வணிகனின் உயிரை மீட்டுத் தரும்படி அவன் மனைவி கதறி அழுது கேட்டுக்கொண்டதின் பேரில் அவள் பால் இரக்கப்பட்டு " சடையாய் எனுமால் " எனத் தொடங்கும் பதிகம் பாடி திருஞானசம்பந்தர் இறைவனிடம் உயிர்ப் பிச்சை கேட்டார். இறந்த வணிகனும் திருமருகல் இறைவன் மாணிக்கவண்ணர் பேரருளால் உயிர் பெற்று எழுந்தான். அதே போன்று திங்களூர் சிவஸ்தலத்தில் பாம்பு கடித்து இறந்து விட்ட அப்பூதியடிகள் மூத்த மகனை "ஒன்று கொலாம் " என்று ஆரம்பிக்கும் பதிகம் பாடி இறந்தவனை உயிர்ப்பித்து எழுப்பிய அற்புதம் திருநாவுக்கரசரால் நிகழ்ந்தது. ஒவ்வொரு சிவஸ்தலமும் ஒவ்வொரு பெருமை பெற்றது.

தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் மூவரும் அவர்கள் காலத்தில் உள்ள போக்குவரத்து சிரமங்களையும் பாராமல் இந்த கோவில்களுக்குச் சென்று அங்குள்ள சிவபெருமானைப் பாடி புகழ்ந்துள்ளனர். ஒரு சில சிவஸ்தலங்களுக்கு இவர்கள் நேரில் போகாமல் இருந்த போது, இறைவனே இவர்கள் கனவிலோ அல்லது அசரீரியாகவோ கூப்பிட்டு அவர்களை வரச்செய்து இறைவன் தன் மேல் பதிகங்கள் பாட வைத்திருக்கிறார்.

இவர்கள் பாடிய பதிகங்கள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் பல ஆண்டுகளாக சிதம்பரம் கோவிலில் உள்ள ஓர் அறையில் பூட்டி வைக்கபட்டு இருந்தன. திருமுறை கண்ட சோழன் என்றழைக்கப்படும் ராஜராஜ சோழன் காலத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டு திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுத்து ஒழுங்கு படுத்தப்பட்டன. சைவத் திருமுறைகள் 12 ஆக வகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதல் 7-ம் தேவார மூவர் பாடிய பதிகங்களைப் பற்றிய விபரங்களைக் கொண்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய பதிகங்களைக் கொண்டுள்ளன. 4,5, 6-ம் திருமுறைகளில் திருநாவுக்கரசர் பாடிய பதிகங்களும், 7-ம் திருமுறையில் சுந்தரர் பாடிய பதிகங்களும் இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கியங்களில் தேவாரப் பாடல்கள் என்று குறிப்பிடப்படும் இந்த பதிகங்கள் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளன.


திருநாவுக்கரசர் (அப்பர்)சிவஸ்தலங்கள் எண்ணிக்கை
சிவன் கோவில்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 125
நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 98
பதிகம் பெறாத சிவஸ்தலங்கள்51
திருஞானசம்பந்தர்சிவஸ்தலங்கள் எண்ணிக்கை
சிவன் கோவில்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 219
நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 12
பதிகம் பெறாத சிவஸ்தலங்கள்43
சுந்தரர்சிவஸ்தலங்கள் எண்ணிக்கை
சிவன் கோவில்களுக்கு நேரில் சென்று பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 84
நேரில் செல்லாமல் மற்ற சிவன் கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றி பதிகம் பாடிய சிவஸ்தலங்கள் 54
பதிகம் பெறாத சிவஸ்தலங்கள்136

No comments:

Post a Comment