Sunday, December 5, 2010

ரத்னகீரீஸ்வரர் திருக்கோயில்





சிவஸ்தலம் பெயர்திருவாட்போக்கி (ரத்னகிரி)
இறைவன் பெயர்வாட்போக்கி நாதர், இரத்தினகிரிநாதர்
இறைவி பெயர்கரும்பார்குழலி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது திருச்சி - கரூர் சாலையிலுள்ள குளித்தலை அடைந்து அங்கிருந்து தெற்கே மணப்பாறை செல்லும் வழியில் சுமார் 10 கி.மி. தொலைவில் இரத்தினகிரி என்னும் இடத்தில் இத்தலம் அமைந்திருக்கிறது. தற்போது மக்கள் வழக்கில் ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது. குளித்தலை ரயில் நிலையம் திருச்சி - ஈரோடு ரயில் மார்க்கத்தில் இருக்கிறது.
ஆலய முகவரி அருள்மிகு ரத்னகீரீஸ்வரர் திருக்கோயில்
(வாட்போக்கி) ஐயர்மலை
சிவாயம் அஞ்சல்
(வழி) வைகநல்லூர்
திருச்சி மாவட்டம்
PIN - 639 124

இவ்வாலயம் தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தமிழ்நாட்டிலுள்ள கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகில் இருக்கும் 3 சிவஸ்தலங்களை ஒரே நாளில் காலை, பகல் மற்றும் மாலை வேளைகளில் சென்று தரிசனம் செய்து வணங்கினால் புண்ணியம் என்று கூறப்படுகிறது. இவற்றுள் திருஈங்கோய்மலை காவிரி வடகரைத் தலம். மற்ற இரண்டு தலங்களான திருவாட்போக்கியும், திருகடம்பந்துறையும் காவிரி தென்கரைத் தலங்கள். அவ்வகையில் திருவாட்போக்கி (இரத்தினகிரி) தலத்தில் உள்ள இரத்தினகிரிநாதரை பகல் தரிசனம் செய்து வழிபடுவது மிகவும் பலனுடையது என்று கருதப்படுகிறது. இங்கு அகத்தியர் உச்சிக்கால வழிபாடு (மத்தியான தரிசனம்) பெற்றபடியால், இங்கே உச்சிக்கால வழிபாடு சிறந்தது என்பர்.


இரத்தினம் வேண்டிவந்த வடநாட்டு வேந்தன் ஒருவனுக்கு இறைவன் அந்தணர் வடிவில் வந்து நீர்த்தொட்டி ஒன்றைக் காட்டி அதைக் காவிரி நீரால் நிரப்பி அதில் நீராடினால் பலன் கிடைக்கும் என்று சொன்னார். வேந்தன் எவ்வளவு முயன்றும் நீர்த்தொட்டியை காவிரி நீரால் நிரப்ப முடியவில்லை. கோபமுற்ற அரசன் அந்தணர் மீது கோபம் கொண்டு தன் வாளை ஓங்கி அந்தணரை வெட்ட முயன்றான். அந்தக் கணமே இறைவன் அவ்வாளைப் போக்கி மன்னன் முன் காட்சி கொடுத்து இரத்தினம் தந்த காரணத்தால் இத்தலம் வாட்போக்கி என்னும் பெயர் பெற்றதென்பர். மன்னனுக்கு இரத்தினம் கோடுத்து உதவியதால் இறைவன் இரத்தினகிரிநாதர் என்றும், மன்னன் வாளைப் போக்கியதால் வாட்போக்கி நாதர் என்றும் வழங்கப்படுகிறார். இன்றும் சிவலிங்கத்தின் மேற்புறத்தில் வெட்டுப்பட்ட வடுவைக் காணலாம்.


இத்தலத்தில் இறைவன் மேற்கு நோக்கியும், இறைவி கிழக்கு நோக்கியும் அருட்காட்சி தருகின்றனர். இத்தல இறைவன் ஒரு சுயம்பு மூர்த்தி. ஈசனுக்கு மலைக்கொழுந்தீசர், மத்தியானச் சொக்கர் என்ற திருப்பெயர்களும் உண்டு. ஆலயம் ஓரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. மலைக் கோவிலும், அதன் பிரகாரங்களும் பிரணவ வடிவில் அமைந்திருப்பதால் இத்தலத்திற்கு சிவாயமலை என்ற பெயரும் உண்டு. தலவிருட்சம் வேப்பமரம் இந்திரனால் உண்டாக்கப்பட்ட சிறப்புடையது. இந்திரன், சயந்தன், வாயு, ஆதிசேஷன், அகத்தியர் முதலியோர் இத்தலத்து இறைவனை பூசித்துப் பேறு பெற்றுள்ளனர்.

கோயில் மலைமேல் உள்ள கோவிலை அடைய சுமார் 1140 படிகளைக் கடந்து ஏறிச் செல்லவேண்டும். அடிவாரத்தில் உள்ள பிராதன விநாயகரைத் தரிசித்து ஏறத் தொடங்கவேண்டும். அடிவாரத்தில் நால்வர் சந்நிதிகள், அலங்கார வளைவுள்ளது. 750 படிகளைத் தாண்டிய பின்பு "உகந்தாம் படி" வருகிறது. இங்கு விநாயகர் சந்நிதியும், சுரும்பார் குழலி சந்நிதியும் உள்ளன. அவற்றை வலமாக வந்து மேலேறிச் சென்றால் வாட்போக்கிநாதர் சந்நிதியை அடையலாம். கோயிலினுள் நுழையும்போது நம்மை முதலில் வரவேற்பது தட்சிணாமூர்த்தி சந்நிதிதான். தரிசித்து உள்ளே நுழைந்தால் இரத்தினகிரிநாதர் தரிசனம் கிட்டுகிறது. சிவராத்திரி நாட்களில் அல்லது முன்பின் நாட்களில் சூரிய ஒளி சுவாமிக்கு நேரே அமைக்கப்பட்டுள்ள சாளரம் வழியாக வந்து சுவாமி மீது படுகிறது. கோயில் உள்ளே நடராஜர், சிவகாமி சந்நிதிகளும், சுப்பிரமணியர் சந்நிதியும், வைரப்பெருமாள் சந்நிதியும் உள்ளன. இத்தல இறைவன் ரத்தினகிரீஸ்வரருக்கு நாள் தோறும் அருகிலுள்ள காவிரியிலிருந்து 10 குடங்களில் நீர்கொண்டு வரப்பட்டு உச்சிக்கால அபிஷேகம் செய்யப்படுகிறது.

அப்பர் பாடியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. கால பாசம் பிடித்தெழு தூதுவர்
பால கர்விருத் தர்பழை யாரெனார்
ஆல நீழ லமர்ந்தவாட் போக்கியார்
சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே.

2. விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்
படுத்த போது பயனிலை பாவிகாள்
அடுத்த கின்னரங் கேட்கும்வாட் போக்கியை
எடுத்து மேத்தியும் இன்புறு மின்களே.

3. வந்திவ் வாறு வளைத்தெழு தூதுவர்
உந்தி யோடி நரகத் திடாமுனம்
அந்தி யின்னொளி தாங்கும்வாட் போக்கியார்
சிந்தி யாவெழு வார்வினை தீர்ப்பரே.

4. கூற்றம் வந்து குமைத்திடும் போதினாற்
தேற்றம் வந்து தெளிவுற லாகுமே
ஆற்ற வுமருள் செய்யும்வாட் போக்கிபால்
ஏற்று மின்விளக் கையிருள் நீங்கவே.

5. மாறு கொண்டு வளைத்தெழு தூதுவர்
வேறு வேறு படுப்பதன் முன்னமே
ஆறு செஞ்சடை வைத்தவாட் போக்கியார்க்
கூறி யூறி உருகுமென் னுள்ளமே.

6. கான மோடிக் கடிதெழு தூதுவர்
தான மோடு தலைபிடி யாமுனம்
ஆனஞ் சாடி யுகந்தவாட் போக்கியார்
ஊன மில்லவர்க் குண்மையில் நிற்பரே.

7. பார்த்துப் பாசம் பிடித்தெழு தூதுவர்
கூர்த்த வேலாற் குமைப்பதன் முன்னமே
ஆர்த்த கங்கை யடக்கும்வாட் போக்கியார்
கீர்த்தி மைகள் கிளர்ந்துரை மின்களே.

8. நாடி வந்து நமன்தமர் நல்லிருள்
கூடி வந்து குமைப்பதன் முன்னமே
ஆடல் பாடல் உகந்தவாட் போக்கியை
வாடி யேத்தநம் வாட்டந் தவிருமே.

9. கட்ட றுத்துக் கடிதெழு தூதுவர்
பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமே
அட்ட மாமலர் சூடும்வாட் போக்கியார்க்
கிட்ட மாகி யிணையடி யேத்துமே.

10. இரக்க முன்னறி யாதெழு தூதுவர்
பரக்க ழித்தவர் பற்றுதன் முன்னமே
அரக்க னுக்கருள் செய்தவாட் போக்கியார்
கரப்ப துங்கரப் பாரவர் தங்கட்கே.

No comments:

Post a Comment