தமிழ்நாட்டிலுள்ள கரூர் மாவட்டத்தில் குளித்தலை அருகில் இருக்கும் 3 சிவஸ்தலங்களை ஒரே நாளில் காலை, பகல் மற்றும் மாலை வேளைகளில் சென்று தரிசனம் செய்து வணங்கினால் புண்ணியம் என்று கூறப்படுகிறது. இவற்றுள் திருஈங்கோய்மலை காவிரி வடகரைத் தலம். மற்ற இரண்டு தலங்களான திருவாட்போக்கியும், கடம்பந்துறையும் காவிரி தென்கரைத் தலங்கள். அவ்வகையில் திருகடம்பந்துறை தலத்தில் உள்ள கடம்பவனநாதரை காலை தரிசனம் செய்து வழிபடுவது மிகவும் பலனுடையது என்று கருதப்படுகிறது.
கடம்பவன நாதர் கோவில் காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கிறது. சிவன் கோவில்கள் எல்லாம் ஒன்று கிழக்கு நோக்கி அல்லது மேற்கு நோக்கித் தான் அமைந்திருக்கும். கங்கைக் கரையில் காசி விஸ்வநாதர் கோவில் வடக்கு நோக்கி இருப்பது போல், காவிரிக் கரையில் வடக்கு நோக்கி இருக்கும் கோவில் இது ஒன்று தான். இறைவன் கடம்பவன நாதர் லிங்கத் திருவுருவுக்குப் பின்னால் சப்த கன்னியர் உருவச் சிலைகள் இருக்கின்றன. சப்தகன்னிகைகளின் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான தலம் இதுவாதலின், மூலவர் பின்னால் சப்தகன்னிகைகளின் உருவங்கள் கல்லில் பிம்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. வெளிப் பிரகாரத்தின் வடமேற்குப் பகுதியில் இறைவி முற்றிலா முலையம்மை சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உள் பிராகாரத்தில் 63 மூவருடைய மூல, உற்சவத் திருமேனிகள் உள்ளன. இக்கோவிலில் இரண்டு சோமஸ்கந்த மூர்த்திகள், இரண்டு நடராஜர் மூர்த்திகள் இருக்கின்றன. ஒரு நடராஜ மூர்த்தியின் முயலகன் இருக்க, மற்றொன்றில் இல்லை. தலவிருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் காவிரி நதி. கண்ணுவ முனிவரும், தேவர்களும் இத்தலத்து இறைவனை பூசித்துப் பேறு பெற்றுள்ளனர். கண்ணுவ முனிவருக்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தந்த தலம்.
திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது:
முற்றி லாமுலை யாளிவ ளாகிலும்
அற்றந் தீர்க்கும் அறிவில ளாகிலுங்
கற்றைச் செஞ்சடை யான்கடம் பந்துறைப்
பெற்ற மூர்தியென் றாளெங்கள் பேதையே.
தனகி ருந்ததோர் தன்மைய ராகிலும்
முனகு தீரத் தொழுதெழு மின்களோ
கனகப் புன்சடை யான்கடம் பந்துறை
நினைய வல்லவர் நீள்விசும் பாள்வரே.
ஆரி யந்தமி ழோடிசை யானவன்
கூரி யகுணத் தார்குறி நின்றவன்
காரி கையுடை யான்கடம் பந்துறைச்
சீரி யல்பத்தர் சென்றடை மின்களே.
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை
வண்ண நன்மல ரான்பல தேவருங்
கண்ண னும்மறி யான்கடம் பந்துறை
நண்ண நம்வினை யாயின நாசமே.
மறைகொண் டமனத் தானை மனத்துளே
நிறைகொண் டநெஞ்சி னுள்ளுற வைம்மினோ
கறைகண் டனுறை யுங்கடம் பந்துறை
சிறைகொண் டவினை தீரத் தொழுமினே.
நங்கை பாகம்வைத் தநறுஞ் சோதியைப்
பங்க மின்றிப் பணிந்தெழு மின்களோ
கங்கைச் செஞ்சடை யான்கடம் பந்துறை
அங்க மோதி அரனுறை கின்றதே.
அரிய நான்மறை ஆறங்க மாயைந்து
புரியன் தேவர்க ளேத்தநஞ் சுண்டவன்
கரிய கண்டத்தி னான்கடம் பந்துறை
உரிய வாறு நினைமட நெஞ்சமே.
பூமென் கோதை உமையொரு பாகனை
ஓமஞ் செய்தும் உணர்மின்கள் உள்ளத்தாற்
காமற் காய்ந்த பிரான்கடம் பந்துறை
நாம மேத்தநந் தீவினை நாசமே.
பார ணங்கி வணங்கிப் பணிசெய
நார ணன்பிர மன்னறி யாததோர்
கார ணன்கடம் பந்துறை மேவிய
ஆர ணங்கொரு பாலுடை மைந்தனே.
நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப்
பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார்
காலால் ஊன்றுகந் தான்கடம் பந்துறை
மேலால் நாஞ்செய்த வல்வினை வீடுமே.
Hara om
ReplyDeleteWelcome all of you to our town and get the Wishes of our one and only lord Sri Kadamba vaneshwarar.
Piraan Adimai
Sadyojata Sivam